Loading....

தேர்வில் முறைகேடுகள், குளறுபடிகள்: ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் எஸ்ஐஓ வலியுறுத்தல்

இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் அம்பலமாகியுள்ளது. அதேபோல, யுஜிசி நெட் தேர்விலும் முறைகேடுகள் அம்பலமாகி அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நடைபெற இருந்த முதுகலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இப்படியான தேர்தல் குளறுபடியால் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்குக் காத்திருந்த மாணவர்கள் கடுமையாக மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

முதுகலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக பல மருத்துவர்கள் தம் சம்பாத்தியத்தை குறைத்துக்கொண்டு தேர்வுக்காக முழுமையாகத் தயாராகி வருகின்றனர். அவர்கள் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால்தான் முதுகலைப் படிப்பில் சேர முடியும் என்ற நிலையில், ஏற்கனவே மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட தேர்வு இம்முறையும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது தேர்வுக்குத் தயாரான ஏராளமானோரை கடுமையாக பாதித்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதால் அவர்கள் சில நாட்களுக்கு முன்பாகவே அங்கு சென்று தங்கி தேர்வுக்குத் தயாராகினர். இந்தச் சூழலில், கடைசி நேரத்தில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருப்பது அனைத்து மாணவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தேர்வில் தேர்வுக்கான கட்டணம் வசூலிப்பது தொடங்கி, தேர்வு மையங்களை வெளி மாநிலங்களில் அமைத்ததுவரை ஆரம்பம் முதலே பல்வேறு குளறுபடிகள் இருந்த நிலையில்தான், தற்போது முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேர்வுகளை நேர்மையாகவும் முறையாகவும் நடத்தத் தகுதியற்ற ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும். இன்று ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு உடனடியாக நடத்தப்பட வேண்டும்; அத்துடன் மாணவர்களுக்கு அவர்களின் மாநிலங்களிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட வேண்டும். மேலும், நீட் தேர்வுகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என எஸ்ஐஓ வலியுறுத்துகிறது.

அஹ்மது ரிஸ்வான்,

மாநிலத் தலைவர்,

SIO தமிழ்நாடு.

Back To Top