Loading....

Author: admin

சர்வ விஷ்ச அபியான் (SSA) திட்ட நிதியின் முதல் தவணை தொகையை உடனே வழங்க வேண்டும் – எஸ்ஐஓ வலியுறுத்தல்

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய பாஜக அரசு
நிறுத்தி வைத்திருக்கிறது. புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு எதிர்க்கிறது என்ற காரணத்திற்காகவே இப்படி மலிவான பழிவாங்கல் நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொள்கிறது. இது தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத்தையும், மாணவர்களின் நலனையும் பாதிக்கும் போக்காகும்.

ஒன்றிய அரசு தனது அரசியல் பழிவாங்கலை நிறுத்திவிட்டு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய சர்வ விஷ்ச அபியான் (SSA) திட்ட நிதியின் முதல் தவணை தொகை ₹573 கோடியை உடனே வழங்க வேண்டும்.

தமிழ்நாடு கல்வியில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதை நாடறியும். எனவே தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத்திற்கு இவ்வாறு தடங்கல் செய்யும் எந்த ஒரு நடவடிக்கையையும் பாஜக கைவிட வேண்டும்.

ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு 100 ரூபாய் வழங்கினால் 29 ரூபாய் மட்டுமே மாநிலத்திற்குத் திரும்பிக் கொடுக்கப்படுகிறது. 2018 – 2023 வரை 8.04 லட்சம் கோடி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் வழங்கி உள்ளோம். ஆனால் திரும்பி வழங்கியது 1.58 லட்சம் கோடி. இவ்வாறு ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.

உண்மை நிலவரம் இவ்வாறிருக்கும் நிலையில், இப்போது SSA திட்ட நிதியையும் நிறுத்துவது ஏற்புடையதல்ல. எனவே அதை உடனடியாக வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பாக வலியுறுத்துகிறோம்.

– முஹம்மது ஜாஃபர்,
மாநில இணைச் செயலாளர்,
எஸ்ஐஓ தமிழ்நாடு.

தேர்வில் முறைகேடுகள், குளறுபடிகள்: ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் எஸ்ஐஓ வலியுறுத்தல்

இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் அம்பலமாகியுள்ளது. அதேபோல, யுஜிசி நெட் தேர்விலும் முறைகேடுகள் அம்பலமாகி அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நடைபெற இருந்த முதுகலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இப்படியான தேர்தல் குளறுபடியால் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்குக் காத்திருந்த மாணவர்கள் கடுமையாக மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

முதுகலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக பல மருத்துவர்கள் தம் சம்பாத்தியத்தை குறைத்துக்கொண்டு தேர்வுக்காக முழுமையாகத் தயாராகி வருகின்றனர். அவர்கள் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால்தான் முதுகலைப் படிப்பில் சேர முடியும் என்ற நிலையில், ஏற்கனவே மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட தேர்வு இம்முறையும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது தேர்வுக்குத் தயாரான ஏராளமானோரை கடுமையாக பாதித்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதால் அவர்கள் சில நாட்களுக்கு முன்பாகவே அங்கு சென்று தங்கி தேர்வுக்குத் தயாராகினர். இந்தச் சூழலில், கடைசி நேரத்தில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருப்பது அனைத்து மாணவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தேர்வில் தேர்வுக்கான கட்டணம் வசூலிப்பது தொடங்கி, தேர்வு மையங்களை வெளி மாநிலங்களில் அமைத்ததுவரை ஆரம்பம் முதலே பல்வேறு குளறுபடிகள் இருந்த நிலையில்தான், தற்போது முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேர்வுகளை நேர்மையாகவும் முறையாகவும் நடத்தத் தகுதியற்ற ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும். இன்று ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு உடனடியாக நடத்தப்பட வேண்டும்; அத்துடன் மாணவர்களுக்கு அவர்களின் மாநிலங்களிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட வேண்டும். மேலும், நீட் தேர்வுகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என எஸ்ஐஓ வலியுறுத்துகிறது.

அஹ்மது ரிஸ்வான்,

மாநிலத் தலைவர்,

SIO தமிழ்நாடு.

Pride Month, A Warning!

LGBTQIA+ ‘சமூகம்’ என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோரால் ஜூன் மாதம் Pride மாதமாகக் கொண்டாடப்படுகிறது. அவர்களின் நெறிபிறழ்ந்த செயல்களை இயல்பாக்கம் செய்யவும், அவற்றின் மீதுள்ள இயல்பான அருவருப்பைப் போக்கி, சமூக ஏற்பைப் பெறவும் இவ்வாறு கடைப்பிடிக்கப்படுகிறது. பல விதமான பாலின ஈர்ப்பையும், பாலின அடையாளத்தையும் கொண்டவர்களாக LGBT+ ‘சமூகத்தினர்’ தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். அவர்களின் கருத்தியலைப் பரவலாக்குவதற்கு ஜூன் மாதத்தில் Pride பேரணிகள், நேரடி மற்றும் இணையவழி நிகழ்வுகள் போன்றவை நடத்தப்படுகின்றன.

ஒடுக்கப்பட்டோர் என்று சொல்லிக் கொண்டு தமிழக நகரங்களிலும் Pride பேரணிகள் அரசின் துணையோடு நடத்தப்படுகின்றன. LGBT+ கருத்தியலை விமர்சிக்கும் கருத்துகள், தனிமனிதர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது. அதேவேளை, இந்தக் கருத்தியலை பள்ளிக்கூட பாடத்திட்டத்தில்கூட நுழைத்து குழந்தைகளைப் பாலியல்மயமாக்க முயற்சி செய்யப்படுகிறது. இச்சூழலில், பெற்றோர் தம் குழந்தைகளை இதிலிருந்து பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அனைவரையும் உள்ளடக்குதல் (inclusivity), பன்முகத்தன்மை (diversity) போன்ற முழக்கங்களைக் கொண்டு பெண்களின், பழங்குடியினரின், தலித்களின், சிறுபான்மையினரின் வாய்ப்புகளை LGBTயினர் தட்டிப் பறிக்க முனைகின்றனர். முக்கியமான சமூக பொருளாதார அரசியல் பிரச்னைகளிலிருந்தும் மக்களை தம் பக்கம் திசை திரும்புகின்றனர். அரசியல் சரித்தன்மை (political correctness) எனக் கூறி, எவ்வித ஆதாரமோ விவாதமோ இன்றி தங்களின் மனோ இச்சைகளை பொது மக்கள் அப்படியே ஏற்க நிர்பந்திக்கின்றனர். ஹார்மோன் சிகிச்சை, பாலின மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட ஆபத்தான மற்றும் இயல்புக்கு மாற்றமுடியாத அளவு உடலைச் சிதைக்கும் மருத்துவ சிகிச்சை முறைகளை வலியுறுத்துகின்றனர். மேலும், LGBTயினர் எய்ட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் பரவுவதைக் குறித்த அறிவியல் ஆய்வுகளையும் புறக்கணிக்கின்றனர்.

LGBT+ கருத்தியலுக்கு எதிராகக் கருத்துரைப்போர் மீது பல முத்திரைகள் குத்தப்படுகின்றன. அதுகுறித்து விவாதிப்பதற்கான வெளி கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி வருகிறது. LGBT+ நபர்களுடன் மக்கள் கண்ணியமாக உரையாடும்படி நாங்கள் வலியுறுத்துகிறோம். கருத்து வேறுபாடுகள் இருப்பினும் சமூக ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டியது நமது கடமை. நன்மையை ஏவி தீமையைத் தடுத்தலை வலியுறுத்துகிறது இஸ்லாமிய அறவியல். அந்த வகையில், LGBT+ ‘சமூகத்தைச்’ சேர்ந்த, அவர்களை ஆதரிக்கிற முஸ்லிம் சகோதர சகோதரிகள் தங்களின் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துவதிலும், நபிகளாரின் வழிமுறைகளைப் பின்பற்றுவதிலும் கவனம் செலுத்தி, நமது பித்ரா எனும் இயல்புக்கும் மார்க்கத்துக்கும் மாற்றமான செயல்களில் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்துகொள்வதோடு, பிறரையும் இப்படியான தீங்குகளிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO)

முஸ்லிம் தேர்வர்கள் பாதிப்பு: SET தேர்வு அட்டவணையில் மாற்றம் தேவை – SIO கோரிக்கை

தமிழகக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிகளுக்கான SET தகுதித் தேர்வு சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு தேதி முஸ்லிம் தேர்வர்களை பாதிக்கும் வகையில் உள்ளது.

ஆங்கிலம், வணிகம் போன்ற 6 பாடங்களுக்கு 07.06.2024 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்குத் தேர்வு நடைபெறும் என தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மதியமும் முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். இதைக் கருத்தில் கொள்ளாமல் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படியான அலட்சியப் போக்கால் முஸ்லிம் தேர்வர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள்.

எனவே, முஸ்லிம் தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெள்ளிக்கிழமை மதியம் நடைபெறும் SET தேர்வுகளின் நேரத்தை மாற்றுமாறு தமிழக அரசு மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு SIO கோரிக்கை வைக்கின்றது.

ரஹமத்துல்லா,
மாநில கல்வி வளாகச் செயலாளர்,
SIO தமிழ்நாடு.

ரம்ஜான் அன்று தேர்வு – தமிழக அரசுக்கு எஸ்ஐஓ கண்டனம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்திற்கான ஆன்லைன் தேர்வு ரமலான் பெருநாளான இன்று மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

இந்த அறிவிப்பு நேற்று இரவு 9 மணிக்குத்தான் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் தம் பண்டிகையைக் கொண்டாடக்கூடிய நாளில், அரசு விடுமுறை தினத்தில் இதுபோன்ற தேர்வுகளை வைப்பது ஏற்புடையதல்ல. முஸ்லிம் மாணவர்கள் தேர்வை எழுதக் கூடாது என்ற நோக்கத்துடன் இவ்வாறு செய்யப்படுகிறதா என்ற கேள்வியை இது எழுப்புகிறது. முஸ்லிம் சமூகத்தை அலட்சியப்படுத்தும் போக்கு இது.

இந்தத் தேர்வு அறிவிப்பு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். உயர்கல்வித் துறை இதில் தலையிட்டு இன்று நடக்க உள்ள தேர்வை வேறு தேதிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். மேலும், ரம்ஜான் பண்டிகை அரசு விடுமுறை தினம் என தெரிந்தும் இன்று ஆன்லைன் தேர்வு நடக்கும் என அறிவிப்பு வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்ஐஓ கேட்டுக்கொள்கிறது.

முஹம்மது ஜாஃபார்,

மாநில இணைச் செயலாளர்,

எஸ்ஐஓ தமிழ்நாடு.

சிஏஏ சட்டத்தைத் திரும்பப் பெறுக! – எஸ்ஐஓ வலியுறுத்தல்

முஸ்லிம்களின் புனித மாதமான ரமளான் தொடங்கியுள்ள நிலையில் சிஏஏ சட்டத்தை நிறைவேற்றப் போவதாக ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் அறிவிக்கையை வெளியிட்டிருப்பது பாஜகவின் குயுக்தியையும், தோல்வி பயத்தையுமே காட்டுகிறது.

மதப் பாகுபாடுகளைக் கற்பிக்கும் சிஏஏ சட்டம் இயற்றப்பட்டபோது அதற்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லிம்களும், நீதியில் அக்கறையுள்ள அனைவரும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 2020ஆம் ஆண்டு கொரோனா காரணமாக நாட்டு மக்களின் நலன் கருதி இந்தியா முழுவதும் நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தியே அரசியல் செய்யும் பாஜக, சிஏஏ சட்டத்தின் மூலம் இந்நாட்டின் முஸ்லிம் மக்களை ஒடுக்கவும், பெரும்பான்மைவாதத்தைத் தூண்டி அரசியல் லாபமடைவதற்காகவுமே தேர்தல் நேரத்தில் சிஏஏவை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருக்கிறது.

இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதாக நாடகமாடி ஆட்சியைப் பிடித்த மோடி அரசு, பாபர் மசூதி, காஷ்மீர் 370, சிஏஏ என இந்தத் தேர்தலில் முழுமையாக முஸ்லிம் எதிர்ப்பை நம்பியே தேர்தலை எதிர்கொள்கிறது.

முஸ்லிம்களுக்கு பாரட்சம் காட்டும் இந்த சிஏஏ சம்பந்தமான அறிவிக்கையை வெளியிட்ட பாஜக அரசை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு கண்டிக்கிறது. இச்சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்துகிறது. பாஜகவிற்கு எதிராக நாடு முழுவதும் அணிதிரண்டுள்ள அரசியல் கட்சிகள் சிஏஏ சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என தங்களுடைய தேர்தல் அறிக்கையில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என எஸ்ஐஓ கேட்டுக்கொள்கிறது.

அஹ்மது ரிஸ்வான்,

மாநிலத் தலைவர்,

எஸ்ஐஓ தமிழ்நாடு.

இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு இடஒதுக்கீடு: எஸ்ஐஓ வரவேற்பு

இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் இருந்த நிலையில், இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அவர்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

நீண்ட காலக் கோரிக்கைக்குத் தற்பொழுது தீர்வு ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. இறைநெறியைப் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் புதிதாக இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு இருந்த சிக்கல் தற்பொழுது தீர்க்கப்பட்டுள்ளது.

எஸ்ஐஓ இந்தக் கோரிக்கையைத் தொடர்ச்சியாக முன்வைத்து வந்தது. குறிப்பாக, 2022 ஏப்ரலில் முதல்வருக்குக் கோரிக்கை விடுத்தது. இந்தச் சமுதாயக் கோரிக்கையைப் பரிசீலித்து அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசுக்கு இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசின் செவிக்கு இந்தக் கோரிக்கையைக் கொண்டு சென்ற பல்வேறு தரப்பினருக்கும், குறிப்பாக மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் எந்த வகையிலும் வஞ்சிக்கப்படக் கூடாது, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு சரியான முறையில் சென்று சேர வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

அஹ்மது ரிஸ்வான்,

மாநிலத் தலைவர்,

எஸ்ஐஓ தமிழ்நாடு.

பொதுத் தேர்வில் தனித் தேர்வர்கள் பாதிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்

11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கடைப்பிடிக்கப்படும் அகமதிப்பீடு முறையால் தனித் தேர்வர்கள் பாதிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்ஐஓ) கோரிக்கை விடுக்கிறது.

தமிழ்நாட்டில் 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கும், தனியாகத் தேர்வு எழுதுவோருக்கும் எல்லாப் பாடங்களிலும் அகமதிப்பீடு மதிப்பெண் வழங்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண் என்றால் அதில் 90 மதிப்பெண் எழுத்துத் தேர்வு மூலமாகவும், 10 மதிப்பெண் அகமதிப்பீடு வழியாகவும் வழங்கப்படுகிறது.

பெரும்பாலும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அகமதிப்பீட்டில் முழு மதிப்பெண் தரப்படும் நிலையில், 90க்கு 25 எடுத்தால் அவர்கள் தேர்ச்சி ஆகிவிட முடிகிறது. ஆனால், தனியாகத் தேர்வு எழுதுவோருக்கு இதே நிலை இல்லை. அவர்கள் 90க்குப் பரிட்சை எழுதி, அதை 100 மதிப்பெண்ணுக்கு மாற்றிக்கொள்ளும் நடைமுறை உள்ளது. இதனால் அவர்களுக்கு அகமதிப்பீட்டில் முழு மதிப்பெண் கிடைப்பதில்லை. இது அவர்களைப் பெரிதும் பாதிக்கிறது. உதாரணத்துக்கு, தனித் தேர்வர்கள் தேர்வாக வேண்டும் என்றால் 90க்கு 31.5 மதிப்பெண் எடுக்க வேண்டும். அதற்குக் குறைவாக எடுப்போர் தோல்வியடைகிறார்கள்.

தனித் தேர்வர்கள் தோல்வியடைவதற்கான வாய்ப்பை தற்போதைய நடைமுறை அதிகப்படுத்துவதாக அமைந்துள்ளது. பள்ளிக்கூடம் சென்று படிக்க முடியாத சூழலில் வளரும் சிறுவர்கள், இடைநின்றவர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்ற அநேகர் தனியாகத் தேர்வு எழுதுவோராக உள்ளார்கள். தற்போது கடைப்பிடிக்கப்படும் அகமதிப்பீடு முறையால் அவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

எனவே, தனித் தேர்வர்களுக்கான அகமதிப்பீடு மதிப்பெண்ணை தேர்வுகளின் வழியாக வழங்கக் கூடாது. ஒப்படைப்புகளைப் (assignments) பெற்று அவற்றைக் கொண்டு மதிப்பெண் வழங்க அல்லது இதுபோன்ற புதிய வழிமுறைகளைப் பரிசீலிக்க அரசு முன்வர வேண்டும் என்று எஸ்ஐஓ கேட்டுக்கொள்கிறது.

அஹ்மது ரிஸ்வான்,
மாநிலத் தலைவர்,
எஸ்ஐஓ தமிழ்நாடு.

நீட் விலக்கு: தமிழக ஆளுநரின் ஆணவப் பேச்சுக்கு எஸ்ஐஓ கண்டனம்

இன்று ஆளுநர் மாளிகையில், நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய ஒரு மாணவியின் தந்தை, நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் அளிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அந்த மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் தர மாட்டேன் என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

ஆளுநர் என்ற நியமனப் பொறுப்பில் இருக்கும் ஆர்.என்.ரவியின் இந்தப் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தேவை, இங்குள்ள மாணவர்களுக்கு எது சரி என்பனவற்றை தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முடிவு செய்யும். அரசின் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதுதான் ஆளுநரின் கடமை. ஆனால் அதை ஏற்க மாட்டேன் என அவர் கூறியது ஆளிநரின் ஆணவப் போக்கையே காட்டுகிறது.

நீட் தேர்விற்கு முன்பே மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. நீட் சமூக நீதிக்கு எதிராக இருக்கிறது என்பது தொட்டு, அது தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்ற வசதி வாய்ந்த மாணவர்களுக்கு சாதகமாக இருக்கிறது என்றும், அவர்களே அதில் அதிக மதிப்பெண் பெறுவதாகவும் தமிழக மக்களாகிய நாம் தொடர்ச்சியாகக் கூறி வருகிறோம். மட்டுமின்றி, நீட் தேர்வால் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்றும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டுகிறோம்.

இந்நிலையில், பெற்றோர்களின் கேள்விக்கு உரிய பதிலளிக்க முடியாமல் அந்த நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று அலட்சியமாகவும், அதிகாரத் திமிருடனும் கூறுவது கண்டனத்துக்கு உரியதாகும்.

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய பல மசோதாக்களுக்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். மாநில அரசின் மசோதாவிற்கு ஒப்புதல் தராமல், உயர் சாதியினருக்கு, சனாதனத்திற்கு ஆதரவாகவும், சமூக நீதிக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருகிறார். தமிழ்நாட்டின் நலனுக்கு விரோதமாகச் செயல்பட்டுவரும் ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று எஸ்ஐஓ வலியுறுத்துகிறது.

அஹ்மது ரிஸ்வான்,
மாநிலத் தலைவர்,
எஸ்ஐஓ தமிழ்நாடு.

Dept of Medical Education must ensure Admission for Tamil students through AIQ

Every year since the advent of NEET, it has been an uphill battle for medical aspirants, parents, teachers and other stake holders in Tamil Nadu, during the medical admission season. Students face mental health issues during this period and inadvertently some have even chosen to end their lives unable to cope up with the pressure.

In order to clear the exam, students are forced to take up NEET coaching either along with twelfth exams or repeat after the completion of the public exams. Even after years of continuous struggle, due to systemic failure, it has been difficult for Tamil students to get admitted in the government medical colleges of the state.

Considering all factors, it is imperative that the maximum number of students of Tamil Nadu are admitted in the seats available in the state. Students who have secured over 650 marks (varies across categories) must be made sure to avail admission through All India Quota- AIQ (15% of total Tamil Nadu medical seats), thus clearing up a few hundred seats in the State Quota (85% of total seats) for Tamil students.

Providing stress management counselling and creating awareness among students against suicide through helpline number are important damage control initiatives. Similar mechanisms must be put up to make sure that maximum number of students of the state are enrolled in the available medical seats in Tamil Nadu. Disappointingly in 2022, from a total of over 750 seats in AIQ, only 14 were Tamil students.

SIO demands the Dept of Medical Education to immediately run a campaign to identify top scorers of NEET 2023, create awareness among them about AIQ counselling, guide them in the admission process and ensure that maximum seats in the 37 medical colleges in the state are filled by Tamil students.

Syed Saifuddin,
State Secretary,
SIO Tamil Nadu.

Back To Top